Wednesday 21 January 2015

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் நடால் வெற்றி !

ரஃபேல் நடால்                    [ படம் உதவி : பென் சாலமன் ]
மெல்பர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப்போட்டியில்    உலகின் மூன்றாம் நிலை வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால்   வெற்றி பெற்றார்.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப்போட்டியில் அவர்,  உலகின் 112ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டிம் ஸ்மைசெக் கை சந்தித்தார்.

முதல் ஆட்டத்தை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் நடால் எளிதாக வென்றபோதும், அடுத்த இரண்டு ஆட்டங்களை ஸ்மைசெக் சிறப்பாக விளையாடி 6-3, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.

ஆட்டத்தின் இடையே நடாலின் இடது காலில் வலி ஏற்பட்டதால் எளிதில் வெல்லக்கூடிய பல புள்ளிகளை கோட்டை விட்டார். மூன்றாவது ஆட்டத்தில் 5-4 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது, எளிதில் அந்த ஆட்டத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டிய நடால் காலில் ஏற்பட்ட வலியால் அந்த ஆட்டத்தை பறி கொடுத்தார்.

பிறகு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்த பிறகே நான்காவது ஆட்டத்தை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நடாலால் வெல்ல முடிந்தது.

ஸ்மைஸ்செக், தான் உலகின் மூன்றாம் நிலை வீரரோடு ஆடுகிறோம் என்ற பதற்றம் சிறிதுமின்றி இயல்பாக விளையாடினார்.

இவர் புள்ளிகள் பெற்றபோது துள்ளவும் இல்லை, புள்ளிகளை இழந்தபோது துவளவும் இல்லை. மொத்தத்தில் ஒரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் எனில் மிகையில்லை!

ஐந்தாவது ஆட்டத்தில் 5-5 என்று இருவரும் சமநிலையில் இருந்தபோது நடால் அற்புதமாக விளையாடி 6-5 என்ற முன்னிலை பெற்றார்.

நிறைவு ஆட்டத்தில் 3 ஆட்டப்புள்ளிகளை நடால் பெற்ற போதும் மிக மோசமாக அவற்றை நழுவ விட்டார்.

ஆனாலும் சுதாரித்து ஆடி நான்காவது ஆட்டப்புள்ளியை வென்று, 6-2, 3-6, 6-7, 6-3, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று மூன்றாவது சுற்றில் நுழைந்தார்.

இவர் ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் வாகையர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்

ஸ்போர்ட் நியூஸ் இந்தியாவிற்காக..






No comments:

Post a Comment