Thursday 26 September 2013

ஹாக்கி: இந்தியா ஹாட்ரிக் வெற்றி :பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்

ஜோகர் பக்ரு: பாகிஸ்தானுக்கு எதிரான சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்தியா, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்து, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 38வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி கார்னர்' வாய்ப்பில் சுக்மன்ஜித் சிங், முதல் கோல் அடித்தார். பின், 45வது நிமிடத்தில் இந்திய வீரர் இம்ரான் கான், "பீல்டு' கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 46வது நிமிடத்தில் கிடைத்த "பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில், சுக்மன்ஜித் சிங், இரண்டாவது கோல் அடித்தார். பின், 61வது நிமிடத்தில் இந்தியாவின் ராமன்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பாகிஸ்தான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளில் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் தலா 9 புள்ளிகளுடன் மலேசியா, இந்தியா அணிகள் உள்ளன. பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களில் தலா ஒரு புள்ளியுடன் அர்ஜென்டினா, தென் கொரியா அணிகள் உள்ளன. மூன்று போட்டியிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து அணி 6வது இடத்தில் உள்ளது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

பாட்மின்டன்: சிந்து அவுட்: காலிறுதியில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்கள் பிரிவு காலிறுதிக்கு, இந்தியாவின் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம் முன்னேறினர்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சிந்து, ஜப்பானின் அகேன் யமகுசியை சந்தித்தார். 32 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில், சிந்து 6-21, 17-21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 
காலிறுதியில் ஜெயராம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் அஜய் ஜெயராம், ஜப்பானின் யூசி லெகிடாவை 21-13, 11-21, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கோஜயை 21-12, 21-16 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். பிரணாய், டென்மார்க்கின் ஜார்ஜென்சனை 21-14, 13-21, 21-17 என்ற செட்களில் வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
சுமீத் ஜோடி தோல்வி:
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுமீத், மானு அட்ரி ஜோடி, சீனாவின் லியு, குயு ஜிகான் ஜோடியிடம், 17-21, 15-21 என வீழ்ந்தது.
தரவரிசை:
பாட்மின்டன் போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து 10வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல், 4வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையரில், இந்தியாவின் காஷ்யப், ஒரு இடம் பின்தங்கி 14வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான குருசாய்தத் (23வது இடம்), அஜய் ஜெயராம் (30வது), சவுரப் வர்மா (46வது) ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர். ஆனந்த் பவார் (37வது), சாய் பிரனீத் (38வது), ஸ்ரீகாந்த் (39வது) ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.
ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு இரட்டையரில் "டாப்-25' வரிசையில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை. சமீபத்தில் முடிந்த முதலாவது இந்தியன் பாட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடருக்கு பின், இந்திய நட்சத்திரங்கள் சீன தைபே மற்றும் சீனாவில் நடந்த போட்டிகளை புறக்கணித்ததால், பின்னடைவை சந்தித்தனர்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக