Wednesday 25 September 2013

சிந்து அசத்தல் வெற்றி

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து வெற்றி பெற்றார்.
ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இளம் இந்திய வீராங்கனையான சிந்து, ஜப்பானின் யூகினோ நாகாயை சந்தித்தார். முதல் செட்டை சிந்து 21-12 என வென்றார். இரண்டாவது செட்டை 21-13 என சுலபமாக கைப்பற்றினார். 
முடிவில், சிந்து 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி லாட், ஜப்பானின் ஷயாகாவிடம், 15-21, 10-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். 
அஜய் ஜெயராம் அசத்தல்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம், சீன தைபேவின் தின் சென் சூவை 21-11, 21-18 என்ற நேர்செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 
மற்றொரு போட்டிகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் சாவ் ஷசாக்கியை 22-20, 22-24, 21-18 என்ற செட்களில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் ஆனந்த் பவார், இந்தோனேஷியாவின் சோனி குன்கோராவை 21-17, 7-21, 21-18 என்ற செட்களில் வென்றார். இந்திய வீரர் பிரனாய், ஹாங்காங்கின் விங் கீ வாங்கை 15-21, 21-17, 24-22 என்ற செட்களில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 இந்தியாவின் சாய் பிரனீத், ஹாங்காங்கின் யுன் ஹூவிடம், 21-23, 18-21 என போராடி தோல்வியடைந்தார். இந்தியாவின் சவுரவ் வர்மா, ஜப்பானின் ஜுன் தகிமுராவிடம் 24-22, 19-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 
சுமித் ஜோடி அபாரம்: 
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித், மானு அட்ரி ஜோடி, ஜப்பானின் ஹிரோயூகி, ரொயோடா ஜோடியை 21-17, 21-15 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக


சிந்துவுக்கு அர்ஜுனா விருது

புதுடில்லி: சிந்துவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
இந்திய பாட்மின்டன் அணியின் இளம் வீராங்கனை சிந்து, 18. சமீபத்தில் குவாங்சுவில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்றார். இதை பாராட்டும்விதமாக, அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றார். கடந்த ஆக., 31ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (ஆக., 31) இவ்விருதுகளை வழங்கினார். ஆனால், இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர் பைனலில் விளையாடியதால் சிந்துவால் பங்கேற்க முடியவில்லை. நேற்று இந்திய விளையாட்டு ஆணைய கூட்டத்தில் (எஸ்.ஏ.ஐ.,) இவருக்கு அர்ஜுனா விருது தரப்பட்டது. அப்போது, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்தார்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

காலிறுதியில் சானியா ஜோடி

டோக்கியோ: பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, பிரான்சின் கிறிஸ்டினா, இத்தாலியின் பிளேவியா ஜோடியை எதிர் கொண்டது. இதில் முதல் செட்டை 2-6 என இழந்த சானியா ஜோடி, அடுத்த செட்டை 6-0 என கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் "சூப்பர்- டை பிரேக்கரில்' சானியா ஜோடி 10-7 என வென்றது. முடிவில், சானியா, காரா பிளாக் ஜோடி 2-6, 6-0, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பூபதி ஜோடி ஏமாற்றம்

பாங்காங்: தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி தோல்வியடைந்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் தாய்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பூபதி, சுவீடனின் ராபர்ட் ஜோடி, ஸ்பெயினின் டேனியல், இத்தாலியின் பாலோ ஜோடியை சந்தித்தது. இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றி பூபதி ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 என பறிகொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி "சூப்பர்- டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் போராடிய பூபதி ஜோடி 8-10 என இழந்தது. முடிவில் பூபதி, ராபர்ட் ஜோடி 6-2, 3-6, 8-10 என தோல்வியடைந்தது.

- இராசேந்திர உடையார
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக