Wednesday 12 December 2012

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பஞ்சாபின் மான்சாவில் நேற்று நடைபெற்ற தனது கடைசி சுற்று ஆட்டத்தில் 73-28 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. 

இந்தியத் தரப்பில் பரம் சிங் 13 புள்ளிகளையும், மன்மிந்தர் சரண், சுக்பிர் சர்வான் ஆகியோர் தலா 11 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் ஈரான், கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று  நடைபெற்ற மற்றொரு சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 64-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியபோதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

இன்று  (டிச.12) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா, ஈரானையும், பாகிஸ்தான், கனடாவையும் சந்திக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதும். 

அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் நாளை  நடைபெறுகிறது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக