Sunday 28 October 2012

ஃப்ரென்ச் ஒப்பன் இறுதிப்போட்டியில் சாய்னா..!

பாரிஸ்: இந்தியாவின் சாய்னா நெஹ்வால் ஃப்ரென்ச் ஓப்பன் சூப்பர் சீரீஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் நுழைந்தார். 

இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அவர், ஜெர்மனியின்  ஜூலியன் செங்க் ஐ 21-19, 21-8 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.இந்தப்போட்டி 36 நிமிடங்கள் நீடித்தது. 

ஜீலியன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சாய்னாவிடம் தோற்றிருக்கிறார். இதற்கு முன் நடைபெற்ற டென்மார்க் ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர் சாய்னாவிடம் தோற்றுப்போனது நினைவிருக்கலாம்.

இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின்  மினட்சு மிடனி உடன் மோதவிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

நூலிழையில் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ்..!

செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் அரையிறுதியில் கடுமையான போட்டிக்கிடையே, நூலிழையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. 

காசு சுண்டுதலில் வென்று முதலில் மட்டையெடுத்தாடிய தென்னாப்பிரிக்காவின் டைட்டன் அணி. தட்டுத்தடுமாறி முதல் பதினைந்து ஓவர்களில் 90 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது..அதற்கு அடுத்த ஐந்து ஓவர்களில் அந்த அணியின் வேய்ஸ் மற்றும் டேவிட்ஸ் இணை அற்புதமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தினர். 164 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கிய சிக்ஸர்ஸ் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டது. ஆனாலும் இடையே விழுந்த விக்கெட்டுகள் ஆட்டத்தை விறுவிறுப்பானதாக்கியது. இறுதியில் கடைசி பந்தில் ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு உதிரி ஓட்டம் கிடைக்க நூலிலையில் சிட்னி சிக்ஸர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

அந்த அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..