Monday 17 December 2012

சர்வதேச கைபந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சர்வதேச கைபந்து  சம்மேளன சாம்பியன்ஷிப் (ஐஎச்எஃப்) போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. 

நேபாள கைபந்து  சங்கம் சார்பில் நடைபெறும் இப் போட்டி அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் சனிக்கிழமை தொடங்கியது. 

இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், யேமன், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவர் பிரிவில் இந்தியா 43-10 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், ஆப்கானிஸ்தான் 40-18 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தின. 

பாகிஸ்தான் 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும், யேமன் 33-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தின. மகளிர் பிரிவு ஆட்டங்களில் இந்தியா 39-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், நேபாளம் 24-6 என்ற புள்ளிகள் கணக்கில் யேமனையும் வீழ்த்தின. 

இதேபோல் வங்கதேசம் 35-15 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானையும், யேமன் 28-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின.

இப் பாட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கண்டங்களுக்கு இடையிலான ஐஎச்எஃப் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாட நேரடித் தகுதிபெறும்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா 72-12 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிரின் அபார ஆட்டத்துக்கு மலேசிய வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 42-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் பெற்ற இந்தியா, இறுதியில் 72-12 என்ற கணக்கில் வெற்றி கண்டது. 

இந்திய அணியில் பிரியங்கா தேவி அதிகபட்சமாக 13 புள்ளிகளைப் பெற்றுத்தந்தார். கோப்பையைக் கைப்பற்றிய இந்தியாவுக்கு ரூ. 51 லட்சமும், 2ஆவது இடத்தைப் பிடித்த மலேசியாவுக்கு ரூ.51 லட்சமும், 3ஆவது இடத்தைப் பிடித்த டென்மார்க் அணிக்கு ரூ.21 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இதை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வழங்கினார். 


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

3ஆவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்ற இப் போட்டியின் இறுதி ஆட்டம் பஞ்சாபின் லூதியானாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. 

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 34-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இந்திய வீரர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இறுதியில் இந்தியா 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. இந்தியத் தரப்பில் ககன்தீப் சீங் 10 புள்ளிகளையும், குர்லால், மன்மிந்தர் சிங் ஆகியோர் தலா 8 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர். 

இதுவரை நடைபெற்ற 3 உலகக் கோப்பைகளிலும் இறுதிச்சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானுமே மோதியுள்ளன. மூன்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.2 கோடியும், 2ஆவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.1 கோடியும், 3ஆவது இடத்தைப் பிடித்த கனடாவுக்கு ரூ.51 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை துணைத் தலைவர் ராணா மசூத் அஹமது, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா உள்ளிட்டோர் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்தனர். 

அடுத்த ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று சுக்பிர் சிங் அறிவித்தார். மகளிர் அணிக்கு இதுவரை ரூ.51 லட்சம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியின்போது ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சூப்பர் சீரிஸ்: அரையிறுதியில் சாய்னா


சீனாவில் நடைபெற்று வரும் பி.டபிள்யூ.எஃப். உலக சூப்பர் சீரிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாய்னா நெவால்.

இப் போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் சாய்னா தோற்றதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மங்கியது. 

அதனால் கடைசி லீக் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி கண்டால் மட்டுமே சாய்னா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சாய்னா 21-7, 21-18 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியானே செங்கை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.


- இராஜேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக