Tuesday 6 November 2012

ஆசிய கோப்பை கபடி, இந்தியா இறுதிப்போட்டியை புறக்கணித்ததால் பாகிஸ்தான் வாகை.


லாஹூர்: இந்திய பயிற்ச்சியாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து,
இந்திய ஆடவர் கபடி அணி, இறுதிப்போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் அணி வாகையர் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பாரீஸ் மாஸ்டர்ஸ்: பூபதி-போபண்ணா சாம்பியன்

மஹேஷ் பூபதி -ரோஹன் போபண்ணா.

பி.என்.பி. பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச் சுற்றில் பூபதி-போபண்ணா ஜோடி கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (6), 6-3 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் குரேஷி-நெதர்லாந்தின் ஜீயன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தியது. இந்த சீசனில் பூபதி-போபண்ணா ஜோடி வென்றுள்ள இரண்டாவது பட்டம் இது. முன்னதாக துபை டென்னிஸ் போட்டியில் இந்த ஜோடி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2ஆவது முறையாக பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் போபண்ணா பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இதேபோட்டியில் பாகிஸ்தானின் குரேஷியுடன் இணைந்து போபண்ணா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது


_இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி, இந்திய அணிஅறிவிப்பு


சர்வதேச ஹாக்கி சம்மேளன (எஃப்ஐஎச்) சாம்பியன்ஸ் டிராபி மற்றும் லான்கோ சர்வதேச சூப்பர் சீரிஸ் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இவ்விரு போட்டிகளுக்கும் சர்தார் சிங் கேப்டனாகவும், வி.ஆர்.ரகுநாத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய பரத் சேத்ரி (கேப்டன்), குர்பஜ் சிங், சர்வன்ஜித் சிங், துஷர் காண்டேகர் உள்ளிட்ட 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 

காயம் காரணமாக ஒலிம்பிக்கில் விளையாடாத இளம் வீரர் யுவராஜ் வால்மீகி, மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இதேபோல் ரூபிந்தர் சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார். நிதின் திம்மையா, ஆகாஷ்தீப் சிங், ஸ்ரீஜேஷ், பி.டி.ராவ் என இரு கோல் கீப்பர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஹர்பீர் சிங், குர்மைல் சிங் என இரு புதுமுகங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர 6 மாற்று ஆட்டக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி முகாமை அடிப்படையாகக் கொண்டு இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

லான்கோ சூப்பர் சீரிஸ் ஹாக்கிப் போட்டி வரும் 22 முதல் 25 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதைத்தொடர்ந்து எஃப்ஐஎச் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி டிசம்பர் 1 முதல் 9 வரை மெல்போர்னில் நடைபெறுகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. "ஏ' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூஸிலாந்து ஆகிய அணிகளும், "பி' பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி விவரம்: ஸ்ரீஜேஷ், பி.டி.ராவ் (கோல் கீப்பர்கள்), ரகுநாத் (துணை கேப்டன்), ரூபிந்தர் பால் சிங், ஹர்பீர் சிங், சர்தார் சிங் (கேப்டன்), கோதஜித் சிங், பைரேந்திர லகரா, மன்பிரீத் சிங், குர்மைல் சிங், எஸ்.வி.சுனில், குருவிந்தர் சிங் சான்டி, டேனிஸ் முஜ்தபா, எஸ்.கே.உத்தப்பா, நிதின் திம்மையா, யுவராஜ் வால்மீகி, தரம்வீர் சிங், ஆகாஷ்தீப் சிங்.

மாற்று ஆட்டக்காரர்கள்: ஸ்ரீனிவாஸ் ராவ் (கோல் கீப்பர்), அமித் ரோஹிதாஸ், அய்யப்பா, சிங்கிளென்சனா சிங், பிரதான்ன சோமண்ணா, திம்மண்ணா.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

இங்கிலாந்து-மும்பை "ஏ' அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்தது.


இங்கிலாந்து-மும்பை "ஏ' அணிகள் இடையிலான போட்டி டிரா.
மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

மும்பை ஏ-286: இதையடுத்து பேட் செய்த மும்பை "ஏ' அணி 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 80.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. 3ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ஹிகென் ஷா 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 194 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். 

இதன்பிறகு மும்பை அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. சமித் படேல், பனேசர் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற மும்பை "ஏ' அணி 101.4 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து தரப்பில் சமித் படேல், பனேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கிரஹாம் ஆனியன்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மும்பை அணி கடைசி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து-149/2: இதையடுத்து 2ஆவது இன்னிங்ûஸ விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 24 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நிக் காம்ப்டன் சிறப்பாக விளையாடி அரைசதம் கண்டார். 

மறுமுனையில் நிதானமாக ஆடிய ஜொனாதன் டிராட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இயான் பெல் களம் புகுந்தார். அந்த அணி 52 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. அப்போது காம்ப்டன் 64, இயான் பெல் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

3ஆவது போட்டி: முன்னதாக முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய "ஏ' அணியுடன் இங்கிலாந்து அணி டிரா செய்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணி தனது 3ஆவது மற்றும் கடைசி பயிற்சிப் போட்டியில் ஹரியாணாவைச் சந்திக்கிறது. 4 நாள்கள் நடைபெறும் இப் போட்டி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது.

ஸ்டூவர்ட் பிராடுக்கு காயம்: 2ஆவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு தலைமையேற்றிருந்த ஸ்டூவர்ட் பிராடுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனால் 3ஆவது நாளில் அவர் பீல்டிங் செய்தபோதிலும், பந்துவீசவில்லை. முன்னதாக 2ஆவது நாள் ஆட்டத்தின்போது அவர் 10 ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் காயமடைந்துள்ள நிலையில், தற்போது ஸ்டூவர்ட் பிராடும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

இந்திய டெஸ்ட் அணியில் ஹர்பஜன், யுவராஜ்


நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், ஹர்பஜன் சிங்கும், யுவராஜ் சிங்கும் இடம்பெற்றுள்ளனர்.

நவம்பர் மாதம் 15ம் தேதி துவங்க உள்ள இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், தோனி, கம்பீர், சேவாக், சச்சின், புஜரா, கோஹ்லி, உமேஷ், ஓஜா, யுவராஜ், ஹர்பஜன், ரகானே, இஷாந்த் சர்மா, ஜாகீர் கான், தமிழக வீரர்களான அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் இடம்பெறவில்லை


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக