Sunday 24 February 2013

ஏடிபி ஓபன்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி

ஏடிபி ஓபன் 13 டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி முன்னேறியுள்ளது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதியில் போபண்ணா ஜோடி 6-3, 6-7(2), 10-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரிடனி, கனடாவின் அடில் ஷம்ஸ்தீன் ஜோடியை வீழ்த்தியது.

இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜூலியன் நோலி, ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலஸ்க் ஜோடியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது சுற்றில் விளையாடிய இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், ஆஸ்திரேலியாவின் பெர்னட் டாமிக்குடன் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.



- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: இறுதிச்சுற்றில் இந்தியா

தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.

சியோலில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஆடவர் அணி 2-1 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோல் மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி
பெற்றது.

இரண்டாவது முறையாக, ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் ஆசிய ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

இதற்கு முன் 2003-ம் ஆண்டு இஸ்லாமாபாதில் நடைபெற்ற போட்டியில் இரு பிரிவுகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸô, அமெரிக்காவின் மேட்டெக் சான்ட்சாஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
துபையில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் நடியா பெட்ரோவா, கத்ரினா ஸ்ரிபட்னிக் ஜோடியுடன் சானியா ஜோடி பலப்பரீட்சை
நடத்தியது.

1 மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா ஜோடி 6-4, 2-6, 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
 
இந்த சீசனில் சானியா வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். இத்துடன் ஒட்டு மொத்தமாக இரட்டையர் பிரிவில் 16-வது பட்டங்களை அவர் வென்றுள்ளார்



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக