Sunday 9 December 2012

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2ஆவது நிமிடத்திலேயே அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அந்த அணியின் கிறிஸ்டோபர் அதிவேகமாக அடித்ததால், கோல் வாய்ப்பு வீணானது.இதன்பிறகு 5ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஜேமி டுவைர், அதை கோலாக்கினார்.ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலையும் ஜேமி டுவைர்தான் அடித்தார். இதன்பிறகு இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலிய தடுப்பாட்டக்காரர்களிடம் அது எடுபடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


பின்னர் நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிரென்ட் மிட்டன், இந்திய தடுப்பாட்டக்காரர்களை தாண்டி சிறப்பாக பந்தைக் கடத்தினார். அது சகவீரரான கைரான் கோவர் கையில் கிடைக்கவே கோலானது.ஆஸ்திரேலிய அணி சில தவறுகளை செய்ததால், மேலும் சில கோல் வாய்ப்புகளை இழந்தது. இந்திய அணிக்கு 45ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு நழுவியது. இறுதியில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.எஸ்.வி.சுனில் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தசைப்பிடிப்புடனேயே விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்புகூட கிடைக்கவில்லை.



-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக.