Monday 25 February 2013

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் ஓய்வு பெற்றார்

உலகின் மூத்த மாரத்தான் வீரர் ஃபுஜா சிங் (101), ஹாங்காங்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இந்தியாவில் பிறந்தவரான இவர், இப்போது லண்டனில் வசித்து வருகிறார். "டர்பேனுடு டொர்னாடோ' என்று அழைக்கப்படும் ஃபுஜா சிங், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாங்காங் மாரத்தான் போட்டியின் 10 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 32 நிமிடங்கள் மற்றும் 28 விநாடிகளில் கடந்தார்.

போட்டி முடிந்த பின் தனது நீண்ட பயணம் குறித்து ஃபுஜா சிங் கூறியது: இப்போது மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளேன். ஓடுவதால் எந்த உடல் பாதிப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஓடும்போது நன்கு இயங்குவதாக உணர்கிறேன். 

ஆனால், இப்போது அவ்வாறு இருப்பதில்லை. ஓடும்போது சோர்வு ஏற்படுகிறது. ஓய்வு பெறும் இந்நாளை என்னால் மறக்க முடியாது. ஆனால், நற்பணிகளுக்கு பணம் திரட்டுவதற்காக எனது ஓட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

1999-ம் ஆண்டு முதல் ஓடத் தொடங்கிய இவர், ஆங்கிலம் பேசத் தெரியாதது வருத்தம் அளிப்பதாக ஒருமுறை தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி, இவர் 102 வயதைத் தொடுகிறார். டொர்னாடோவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற முழு மாரத்தான் போட்டியில் இவர் பங்கேற்றார். 

இதன்மூலம் இப்போட்டியில் பங்கேற்ற அதிக வயதுடையவர் என்ற பெருமையை ஃபுஜா சிங் பெற்றார். ஆனால், முறையான பிறப்புச் சான்றிதழ் இன்மையால் இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஏடிபி ஓபன்: போபண்ணா ஜோடி சாம்பியன்

ஏடிபி ஓபன் 13 பட்டத்துக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, பிரிட்டனின் ஃபிளெமிங் ஜோடி பட்டம் வென்றது.

பிரான்ஸின் மார்சேல் நகரில் இப்போட்டி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் அஸிம்-உல்-ஹக் குரேஷி, ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை போபண்ணா
ஜோடி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் போபண்ணா ஜோடிக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. மேலும், போபண்ணா, ஃபிளெமிங் ஆகியோர் தலா 250 தரவரிசைப் புள்ளிகளையும் பெற்றனர்.

இத்துடன், இரட்டையர் பிரிவில் போபண்ணா எட்டு ஏடிபி ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஆசிய ஸ்குவாஷ்: தங்கம் வென்றது மகளிர் அணி

தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் 16-வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் தங்கம் வென்றனர்.

அதே சமயம், இறுதிச்சுற்றில் தோல்வியைத் தழுவிய இந்திய ஆடவர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் முன்னேறியிருந்தன.

இறுதிச்சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்திய மகளிர் அணி ஹாங்காங் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

அதே சமயம், பாகிஸ்தான் அணியுடன் மோதிய ஆடவர் அணியினர் 0-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர். இதனால் இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக