Friday 7 December 2012

உலக இளையோர் குத்துச்சண்டை: இந்தியாவிற்கு இரண்டு வெண்கலம்!

ஏராவன், ஆர்மேனியா: ஆர்மேனியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சர்மா, ரஷியாவின் மகமூத் மத்யூவிடம்  9-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லலிதா பிரசாத் 8-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் எல்.வி. பின்னிடம் தோல்வி கண்டார். இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

91 கிலோ எடைப்பிரிவில்  நரேந்தர் பெர்வால் இன்று  அரையிறுதியில், ஜெர்மனியின்  ஃப்ளொரியன் ஸ்சூல்ஸ் ஐ எதிர்த்து களமிறங்குகிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஐந்தாவது சுற்றில் வெற்றி!

விஸ்வநாதன் ஆனந்த், படம் உதவி: Ray Morris-Hill
லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் கெவின் ஜோன்ஸ் ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். கெவின் ஆட்டத்தின் பதினாலாவது நகர்த்துதலில் செய்த ஒரு சிறு தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்த், மிக விரைவிலேயெ ஒரு குதிரையை வீழ்த்தினார்.21 ஆவது நகர்த்துதலில் வெற்றியை முழுவதுமாக உறுதி செய்து 29 ஆவது நகர்த்துதலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் செஸ் போட்டியில் முதல் வெற்றியைப் பெற்று, ஐந்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார் ஆனந்த். ஆறாவது சுற்றில் அவர் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ சந்திக்கிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக