Thursday 28 February 2013

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் 2-வது சுற்றில் ஜெயராம், ஆனந்த்

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், ஆனந்த் பவார் மற்றும் அரவிந்த் பட் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஜெர்மனியின் மயூல்ஹிம் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன. போட்டித் தரவரிசையில் 10-ம் இடத்தில் உள்ள ஜெயராம் 21-12, 21-18 என்ற செட்களில் பிரான்ஸின் பிரைஸ் லீவெர்டெûஸ வீழ்த்தினார். இந்த ஆட்டத்தை அரை மணி நேரத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜெயராம்.

மற்றொரு ஆட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆனந்த் பவார் 22-10, 16-21, 21-16 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் மைக்கேல் லான்ஸ்டெயினரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல, பெங்களூரைச் சேர்ந்த அரவிந்த் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் சக நாட்டவரான அனுப் ஸ்ரீதரை வீழ்த்தினார்.

இந்தியாவின் மற்றொரு வீரரான குருசாய்தத், சீன வீரர் பின் கியோவிடம் தோல்வி கண்டார்.

இப்போட்டியின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடியான அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் 21-15, 21-10 என்ற கணக்கில் ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தருண் கோனா ஜோடி 23-25, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரிக்கி விதன்டோ மற்றும் பஸ்பிதா ரிச்சி திலி ஜோடியை வீழ்த்தியது. இந்திய ஜோடி, முதல் செட்டை இழந்து பின்னும், அடுத்த இரு செட்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களது அடுத்த சுற்றில் இங்கிலாந்து ஜோடியை சந்திக்கிறது.

கலப்பு இரட்டையர் வெற்றியைத் தொடர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவிலும் அஸ்வினி ஜோடி வெற்றி பெற்றது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தோல்வியைத் தழுவினார்.

புதன்கிழமை நடைபெற்ற 2-ம் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்ட்டினுடன் மோதினார் சோம்தேவ்.

உலகின் முன்னணி வீரரான மார்ட்டின் எளிதில் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் அதற்கு சோம்தேவ் தடையாக இருந்தார். இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. 

இறுதியில் கடும் போராட்டத்துக்குப் பின் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் மார்ட்டின் வெற்றி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் செக் குடியரசின் தாம்ஸ் பெர்டிச் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் டாபியஸ் கெம்கேவை தோற்கடித்தார்.

2-ம் சுற்று ஆட்டத்தின்போது, ஆர்ஜெண்டீனாவின் கால்பந்து ஜாம்பவானான மரடோனா டென்னிஸ் விளையாடினார். சோம்தேவ், மார்ட்டின் ஆட்டம் முடிவடைந்த பின், மார்ட்டினுடன் டென்னிஸ் விளையாடினார் மரடோனா. கால்பந்து வீரரான மரடோனா, டென்னிஸ் மட்டையைப் பிடித்து விளையாடியது, ரசிகர்களை வியக்க வைத்தது. மார்டீனும், ஆர்ஜெண்டீனாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஐடிஎஃப் டென்னிஸ்: காலிறுதியில் 5 இந்தியர்கள்

சர்வதேச டென்னிஸ் சம்மேளன (ஐடிஎஃப்) ஆடவர் பியூச்சர்ஸ் போட்டியின் காலிறுதிக்கு 5 இந்தியர்கள் முன்னேறியுள்ளனர்.

இப்போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. 

ஆடவர் ஒற்றையர் போட்டியில் எல்வின் அந்தோனி, ரஞ்சித் விராலி-முருகேசன், என். விஜய் சுந்தர் பிரசாத், ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜயந்த் மாலிக் ஆகிய 5 வீரர்கள் இப்போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 6-1, 4-6 (10-7) என்ற செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த எல்வின் அந்தோனி, ஃபேரிஸ் முகமது ஜோடியை வீழ்த்தியது



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக