Friday 26 October 2012

டெல்லியில் இந்தியா - கொரியா, டேவிஸ் கோப்பை போட்டிகள்..!

ஆர்.கே.கண்ணா டென்னிஸ் விளையாட்டரங்கம், டெல்லி.
டெல்லி: இந்தியா - கொரியா இடையில் அடுத்த ஆண்டு  ஃபெப்ரவரி மாதம், முதல் தேதியிலிருந்து மூன்றாம் தேதி வரை, நடக்க உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள், தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் என அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.ஆசிய / ஓசியானா பிரிவில், தரவரிசையில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தென் கொரியா 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது நினைவுகூறத்தக்கது,

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் ந்யூஸ் இந்தியாவிற்காக.

ஃப்ரென்ச் ஓப்பன் காலிறுதியில் சாய்னா..!


பாரிஸ்: இந்திய இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

இரண்டாம் சுற்றுப்போட்டியில் சாய்னா, தாய்லாந்தின் சாப்சிரி டெரட்டனாசாய் உடன் மோதினார். தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் சாய்னா 21-16, 21-13 என்ற நேர் புள்ளிக்கணக்கில் வென்றார். இந்த போட்டி முப்பத்தேழு நிமிடங்கள் நீடித்தது.

மற்றொரு இரண்டாம் சுற்றுப்போட்டியில் தாய்லாந்தின் ரட்சனாக் இண்டனான் இந்தோனேஷியாவின் அப்ரில்லா யுசுந்தரியை சந்திக்கிறார். இதில் வெற்றிபெறுபவர் காலிறுதியில் சாய்னாவை சந்திப்பார்.



- இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..

டெல்லி டேர் டெவில்ஸ் வீழ்ந்தது..!

Nannes and McKenzie
டர்பன்: சாம்பியன்ஸ் லீக் T20 முதல் அரையிறுதி ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் குழப்பமான அணுகுமுறையால் அந்த அணி லாங்வெல்ட் லயன்ஸ் அணியிடம் 22 ஓட்டங்கள் வேறுபாட்டில் வீழ்ந்தது. 

தலைமைப்பொறுப்பை ராஸ் டெய்லரிடம் கொடுத்தது, தேவை இல்லாமல் டேவிட் வார்னரை தெரிவு செய்தது, தேவையான நேரத்தில் ராஸ் டெய்லருக்கு முன்னதாக நெகியை களமிறக்கியது மற்றும் சேவாக்கின் வழக்கமான பொறுப்பற்ற ஆட்டம் என பல சொதப்பல்களை நேற்று டெல்லி அணி கையாண்டதன் விளைவாக டேர்டெவில்ஸ் பரிதாபமாக வெளியெறியது. 

ஒரு முனையை தக்கவைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய பீட்டர்சனின் ஆட்டம் விழலுக்கு இறைத்த நீரானது, முதலில் விளையாடிய லயன்ஸ் அணி, எகிறி குதித்து வரும் கிங்ஸ்மெட் மைதானத்தில் 139 ஓட்டங்களைப்பெற்றது. அந்த அணியின் போடி 50 ஓட்டங்களைப்பெற்றார், இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியினால் டெல்லி டேர்டெவில்ஸ் வெளியெறியதைத்தொடர்ந்து ஐ பி எல் அணிகள் நான்குமே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஐ பி எல் அணிகள் நான்குமே  அரையிறுதிப்போட்டிக்கு முன்பே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது, பல(த்த) கேள்விகளை எழுப்பியுள்ளது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.