Thursday 3 October 2013

ஜூனியர் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

ஜோகர் பக்ரு: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த பைனலில், மலேசியாவை தோற்கடித்தது.
மலேசியாவில் உள்ள ஜோகர் பக்ரு நகரில், 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3வது சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதில் அர்ஜென்டினா, இந்தியா, இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்றில் அசத்திய இந்தியா, மலேசியா அணிகள் பைனலுக்கு முன்னேறின. நேற்று நடந்த பைனலில், துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 22வது நிமிடத்தில் அமான் மிராஷ் டிர்கே முதல் கோல் அடித்தார். இதற்கு மலேசிய வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் அபார ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு துணைக் கேப்டன் அபான் யூசப் (54வது நிமிடம்), கேப்டன் மன்பிரீத் சிங் (64வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய மலேசிய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கோப்பை வென்றது.
வீரர்களுக்கு பரிசு: சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி (21 வயது) தொடரில், முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்த இந்திய வீரர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க, ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) நேற்று அறிவித்தது. பயிற்சியாளர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் பரிசு வழங்க அறிவித்தது. சமீபத்தில் முடிந்த பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது வென்ற இந்தியாவின் சவிதாவுக்கு, ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்க அறிவிக்கப்பட்டது.

 - இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக