Wednesday 26 December 2012

சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு தங்கம்

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற அகலாரோவ் கோப்பைக்கான இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமன் இந்தோரா தங்கம் வென்றார்.

56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தோரா தனது இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துஜாபரோவ் அஸிஸ்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதுதான் இவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம். இவர் தேசிய ஜூனியர் நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் சிலம்பரசன் (52 கிலோ எடைப் பிரிவு), கைலாஷ் கில் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவின் அபிஷேக் பெனிவால் (81 கிலோ) வெண்கலம் வென்றார். மொத்தம் 8 பேர் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் பங்கேற்றது. அதில் 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இப்போட்டியில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இண்டைவிற்காக

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் கிடைக்கவில்லை. எனினும் 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து பாகிஸ்தானும் கோலடிக்க போராடியது. இதனிடையே 51-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலை சிங்ளென்சனா அடித்தார். 

அடுத்த 6-வது நிமிடத்தில் (57-வது நிமிடம்) பாகிஸ்தானின் முகமது வகாஸ் கோலடித்தார். 

இதன்பிறகு கடைசி வரை போராடியபோதும் பாகிஸ்தானால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

6 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இந்தியா பெற்ற 4ஆவது வெற்றி இது. முன்னதாக சீனா, ஜப்பான், ஓமன் அணிகளை இந்தியா வென்றது. இதன்மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் மலேசியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை (டிச.26) நடைபெறுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன. 

கடைசி ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து இவ்விரு அணிகளில் ஏதாவது ஒன்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக