Wednesday 31 October 2012

20-20 ஆசிய கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி.!

இந்தியாவின் பூனம் ராவுத்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, முதலாவது 20-20 ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானை 18 ஓட்டங்களில் வென்றது.

இந்திய அணி காசு சுண்டுதலில் வென்று முதலில் மட்டையெடுத்தாட முடிவெடுத்தது . ஆனால் அந்த முடிவு தவறு என என்னும் வண்ணம் 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாகவும், நேர்த்தியாகவும் பந்துவீசி 19.1 ஓவரில் 63 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா 18 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்று முதலாவது ஆசிய கோப்பை மகளிர் 20-20 கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

-  இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

கோப்பையை கோட்டைவிட்டார் சாய்னா..!

பாரிஸ்: ஃப்ரென்ச் ஓபன் சூப்பர் சீரீஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் மினட்சு மிடனியிடம் தோல்வியடைந்ததன் மூலம் கோப்பையை கோட்டைவிட்டார் இந்தியாவின் சாய்னா நெஹ்வால். 

இறுதிப்போட்டியில் அவர் மினட்சு மிட்னியிடம் 21-19, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை இழந்தார். டென்மார்க் போட்டியின் இரண்டாவது சுற்றில் சாய்னாவிடம் பெற்ற தோல்வியை இந்த வெற்றியின் மூலம் சரி செய்து கொண்டார் மிட்னி.

- இராசேந்திர உடையார்.
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..

Sunday 28 October 2012

ஃப்ரென்ச் ஒப்பன் இறுதிப்போட்டியில் சாய்னா..!

பாரிஸ்: இந்தியாவின் சாய்னா நெஹ்வால் ஃப்ரென்ச் ஓப்பன் சூப்பர் சீரீஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் நுழைந்தார். 

இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அவர், ஜெர்மனியின்  ஜூலியன் செங்க் ஐ 21-19, 21-8 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.இந்தப்போட்டி 36 நிமிடங்கள் நீடித்தது. 

ஜீலியன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சாய்னாவிடம் தோற்றிருக்கிறார். இதற்கு முன் நடைபெற்ற டென்மார்க் ஓப்பன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர் சாய்னாவிடம் தோற்றுப்போனது நினைவிருக்கலாம்.

இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின்  மினட்சு மிடனி உடன் மோதவிருக்கிறார்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

நூலிழையில் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ்..!

செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் அரையிறுதியில் கடுமையான போட்டிக்கிடையே, நூலிழையில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் நுழைந்தது சிட்னி சிக்ஸர்ஸ் அணி. 

காசு சுண்டுதலில் வென்று முதலில் மட்டையெடுத்தாடிய தென்னாப்பிரிக்காவின் டைட்டன் அணி. தட்டுத்தடுமாறி முதல் பதினைந்து ஓவர்களில் 90 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது..அதற்கு அடுத்த ஐந்து ஓவர்களில் அந்த அணியின் வேய்ஸ் மற்றும் டேவிட்ஸ் இணை அற்புதமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தினர். 164 எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கிய சிக்ஸர்ஸ் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டது. ஆனாலும் இடையே விழுந்த விக்கெட்டுகள் ஆட்டத்தை விறுவிறுப்பானதாக்கியது. இறுதியில் கடைசி பந்தில் ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ஒரு உதிரி ஓட்டம் கிடைக்க நூலிலையில் சிட்னி சிக்ஸர்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

அந்த அணி இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் லயன்ஸ் அணியுடன் மோதுகிறது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..

Saturday 27 October 2012

ஃப்ரென்ச் ஓப்பன் அரையிறுதியில் சாய்னா..!

சாய்னா நெஹ்வால்
பாரிஸ்:  உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை, இந்தியாவின் சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
காலிறுதிப்போட்டியில் சாய்னா, தாய்லாந்தின் ரட்சனாக் இண்தனான் உடன் மோதினார். இந்த போட்டியில் சாய்னா 22-20, 22-20 என்ற நேர் புள்ளிக்கணக்கில் வென்றார். இந்த போட்டி நாற்பத்தொரு நிமிடங்கள் நீடித்தது. இண்தனான் இந்த ஆட்டத்தில் சாய்னாவுக்கு கடும் சவாலாக இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டிருக்கிறார் சாய்னா நெஹ்வால்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.


Friday 26 October 2012

டெல்லியில் இந்தியா - கொரியா, டேவிஸ் கோப்பை போட்டிகள்..!

ஆர்.கே.கண்ணா டென்னிஸ் விளையாட்டரங்கம், டெல்லி.
டெல்லி: இந்தியா - கொரியா இடையில் அடுத்த ஆண்டு  ஃபெப்ரவரி மாதம், முதல் தேதியிலிருந்து மூன்றாம் தேதி வரை, நடக்க உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள், தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் என அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.ஆசிய / ஓசியானா பிரிவில், தரவரிசையில் இந்தியா நான்காம் இடத்தில் இருக்கிறது.

இதற்கு முன்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தென் கொரியா 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது நினைவுகூறத்தக்கது,

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் ந்யூஸ் இந்தியாவிற்காக.

ஃப்ரென்ச் ஓப்பன் காலிறுதியில் சாய்னா..!


பாரிஸ்: இந்திய இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

இரண்டாம் சுற்றுப்போட்டியில் சாய்னா, தாய்லாந்தின் சாப்சிரி டெரட்டனாசாய் உடன் மோதினார். தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் சாய்னா 21-16, 21-13 என்ற நேர் புள்ளிக்கணக்கில் வென்றார். இந்த போட்டி முப்பத்தேழு நிமிடங்கள் நீடித்தது.

மற்றொரு இரண்டாம் சுற்றுப்போட்டியில் தாய்லாந்தின் ரட்சனாக் இண்டனான் இந்தோனேஷியாவின் அப்ரில்லா யுசுந்தரியை சந்திக்கிறார். இதில் வெற்றிபெறுபவர் காலிறுதியில் சாய்னாவை சந்திப்பார்.



- இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..

டெல்லி டேர் டெவில்ஸ் வீழ்ந்தது..!

Nannes and McKenzie
டர்பன்: சாம்பியன்ஸ் லீக் T20 முதல் அரையிறுதி ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் குழப்பமான அணுகுமுறையால் அந்த அணி லாங்வெல்ட் லயன்ஸ் அணியிடம் 22 ஓட்டங்கள் வேறுபாட்டில் வீழ்ந்தது. 

தலைமைப்பொறுப்பை ராஸ் டெய்லரிடம் கொடுத்தது, தேவை இல்லாமல் டேவிட் வார்னரை தெரிவு செய்தது, தேவையான நேரத்தில் ராஸ் டெய்லருக்கு முன்னதாக நெகியை களமிறக்கியது மற்றும் சேவாக்கின் வழக்கமான பொறுப்பற்ற ஆட்டம் என பல சொதப்பல்களை நேற்று டெல்லி அணி கையாண்டதன் விளைவாக டேர்டெவில்ஸ் பரிதாபமாக வெளியெறியது. 

ஒரு முனையை தக்கவைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய பீட்டர்சனின் ஆட்டம் விழலுக்கு இறைத்த நீரானது, முதலில் விளையாடிய லயன்ஸ் அணி, எகிறி குதித்து வரும் கிங்ஸ்மெட் மைதானத்தில் 139 ஓட்டங்களைப்பெற்றது. அந்த அணியின் போடி 50 ஓட்டங்களைப்பெற்றார், இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியினால் டெல்லி டேர்டெவில்ஸ் வெளியெறியதைத்தொடர்ந்து ஐ பி எல் அணிகள் நான்குமே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஐ பி எல் அணிகள் நான்குமே  அரையிறுதிப்போட்டிக்கு முன்பே இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது, பல(த்த) கேள்விகளை எழுப்பியுள்ளது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.

Thursday 25 October 2012

இந்தியா - ஏ அணி தேர்வு..!

Yuvaraj singh and Suresh raina
Yuvaraj Singh and Suresh Raina
 மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று நாள் போட்டியில் விளையாடுவதற்க்கான "இந்தியா-ஏ" அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
இந்தியா ஏ அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டம், மும்பை ப்ரபார்ன் மைதானத்தில், அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி துவங்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அணியில், இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா; ஆகிய நான்கு மிதவேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட தெரிவு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.

இந்த அணிக்கு பயிற்சியாளராக திரு. லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  ஷிகார் தவானின் திருமணம் நடைபெற இருப்பதால் ,அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் யுவராஜ் சிங், முரளி விஜய், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அணி விபரம் (இந்தியா - ஏ):  சுரேஷ் ரெய்னா ( தலைவர்) , முரளி விஜய், அம்பாதி ராயுடு, யுவராஜ் சிங், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி, வ்ரித்மான் சாஹா ( விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா, ராபின் பிஸ்ட், அசோக் மெனாரியா, அபினவ் முகுந்த். பயிற்சியாளர்: லால்சந்த் ராஜ்புத்.

- இராசேந்திர உடையார்..
- ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..

துலீப் கோப்பை: மைய மண்டலம் 74/2!

தன்மய் ஸ்ரீவத்ஸவ்
சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் துலீப்  கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டியில்,  நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், மைய மண்டலம் இரண்டு விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களை எடுத்துள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் தன்மய் ஸ்ரீவத்ஸவ் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

முன்னதாக மழை விளையாடியது போக எஞ்சி இருந்த நேரத்தில் கிழக்கு மண்டலம் விளையாடி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 101.5 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டி நிறைவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்ற நிலையில், வெற்றியாளரை முடிவு செய்யப்போவது, ஒவ்வொரு அணியும் தாங்கள் முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்களே. 

அந்த வகையில் மைய மண்டலம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட இன்னும் 159 ஓட்டங்களை எடுத்தாக வேண்டும். நாளைய ஆட்டம் சூடு பிடிக்குமா இல்லை மழையே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

சுருக்கமான எண்ணிக்கை:

கிழக்கு மண்டலம் : முதல் இன்னிங்ஸ், 101.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்கள்

மைய மண்டலம் : முதல் இன்னிங்ஸ்: 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..

ஃப்ரென்ச் ஓப்பன் இரண்டாவது சுற்றில் சாய்னா !


பாரிஸ்: இந்திய இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

முதல் சுற்றுப்போட்டியில் சாய்னா, சீனாவின் லி ஹன் உடன் மோதினார். தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் சாய்னா 21-11, 16-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் லி ஹன்னை வென்றார். இந்த போட்டி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

சாய்னா தனது இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் சாப்சிரி டெரட்டனாசாய் உடன் மோத இருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த டென்மார்க் ஓப்பன் போட்டியில் வாகை சூடியவர் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..