Sunday 30 December 2012

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இறுதிச் சுற்றில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இப் போட்டியின் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதேபோட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், தற்போது ஆறுதல் தேடிக்கொண்டது


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 26 December 2012

சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு தங்கம்

அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்ற அகலாரோவ் கோப்பைக்கான இளைஞர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமன் இந்தோரா தங்கம் வென்றார்.

56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தோரா தனது இறுதிச்சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துஜாபரோவ் அஸிஸ்பெக்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதுதான் இவர் வென்ற முதல் சர்வதேச பதக்கம். இவர் தேசிய ஜூனியர் நடப்புச் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய வீரர்கள் சிலம்பரசன் (52 கிலோ எடைப் பிரிவு), கைலாஷ் கில் (75 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இந்தியாவின் அபிஷேக் பெனிவால் (81 கிலோ) வெண்கலம் வென்றார். மொத்தம் 8 பேர் கொண்ட இந்திய அணி இப்போட்டியில் பங்கேற்றது. அதில் 4 பேர் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இப்போட்டியில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்தது


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இண்டைவிற்காக

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: இறுதிச் சுற்றில் இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் கிடைக்கவில்லை. எனினும் 2-வது பாதி ஆட்டம் தொடங்கியதுமே இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் கோலடித்தார். இதனால் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து பாகிஸ்தானும் கோலடிக்க போராடியது. இதனிடையே 51-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலை சிங்ளென்சனா அடித்தார். 

அடுத்த 6-வது நிமிடத்தில் (57-வது நிமிடம்) பாகிஸ்தானின் முகமது வகாஸ் கோலடித்தார். 

இதன்பிறகு கடைசி வரை போராடியபோதும் பாகிஸ்தானால் இரண்டாவது கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 

6 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் இந்தியா பெற்ற 4ஆவது வெற்றி இது. முன்னதாக சீனா, ஜப்பான், ஓமன் அணிகளை இந்தியா வென்றது. இதன்மூலம் 12 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் மலேசியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை (டிச.26) நடைபெறுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா, பாகிஸ்தான் ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன. 

கடைசி ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து இவ்விரு அணிகளில் ஏதாவது ஒன்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Monday 17 December 2012

சர்வதேச கைபந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

சர்வதேச கைபந்து  சம்மேளன சாம்பியன்ஷிப் (ஐஎச்எஃப்) போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்களின் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. 

நேபாள கைபந்து  சங்கம் சார்பில் நடைபெறும் இப் போட்டி அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் சனிக்கிழமை தொடங்கியது. 

இதில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், யேமன், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இப்போட்டி நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவர் பிரிவில் இந்தியா 43-10 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், ஆப்கானிஸ்தான் 40-18 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தையும் வீழ்த்தின. 

பாகிஸ்தான் 33-27 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும், யேமன் 33-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தின. மகளிர் பிரிவு ஆட்டங்களில் இந்தியா 39-18 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தையும், நேபாளம் 24-6 என்ற புள்ளிகள் கணக்கில் யேமனையும் வீழ்த்தின. 

இதேபோல் வங்கதேசம் 35-15 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானையும், யேமன் 28-11 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தின.

இப் பாட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் கண்டங்களுக்கு இடையிலான ஐஎச்எஃப் போட்டியின் இரண்டாவது சுற்றில் விளையாட நேரடித் தகுதிபெறும்.


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

மகளிர் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா 72-12 என்ற புள்ளிகள் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 

பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிரின் அபார ஆட்டத்துக்கு மலேசிய வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 42-6 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் பெற்ற இந்தியா, இறுதியில் 72-12 என்ற கணக்கில் வெற்றி கண்டது. 

இந்திய அணியில் பிரியங்கா தேவி அதிகபட்சமாக 13 புள்ளிகளைப் பெற்றுத்தந்தார். கோப்பையைக் கைப்பற்றிய இந்தியாவுக்கு ரூ. 51 லட்சமும், 2ஆவது இடத்தைப் பிடித்த மலேசியாவுக்கு ரூ.51 லட்சமும், 3ஆவது இடத்தைப் பிடித்த டென்மார்க் அணிக்கு ரூ.21 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இதை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வழங்கினார். 


- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

3ஆவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்ற இப் போட்டியின் இறுதி ஆட்டம் பஞ்சாபின் லூதியானாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. 

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் அபார ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 34-9 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இந்திய வீரர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியது. இறுதியில் இந்தியா 59-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. இந்தியத் தரப்பில் ககன்தீப் சீங் 10 புள்ளிகளையும், குர்லால், மன்மிந்தர் சிங் ஆகியோர் தலா 8 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர். 

இதுவரை நடைபெற்ற 3 உலகக் கோப்பைகளிலும் இறுதிச்சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானுமே மோதியுள்ளன. மூன்றிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. 

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.2 கோடியும், 2ஆவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.1 கோடியும், 3ஆவது இடத்தைப் பிடித்த கனடாவுக்கு ரூ.51 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை துணைத் தலைவர் ராணா மசூத் அஹமது, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ராணா சனாவுல்லா உள்ளிட்டோர் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்தனர். 

அடுத்த ஆண்டு முதல் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று சுக்பிர் சிங் அறிவித்தார். மகளிர் அணிக்கு இதுவரை ரூ.51 லட்சம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியின்போது ஒலிம்பிக்கில் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  


- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

சூப்பர் சீரிஸ்: அரையிறுதியில் சாய்னா


சீனாவில் நடைபெற்று வரும் பி.டபிள்யூ.எஃப். உலக சூப்பர் சீரிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் சாய்னா நெவால்.

இப் போட்டியின் முதல் 2 ஆட்டங்களில் சாய்னா தோற்றதால், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மங்கியது. 

அதனால் கடைசி லீக் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி கண்டால் மட்டுமே சாய்னா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சாய்னா 21-7, 21-18 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஜூலியானே செங்கை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார்.


- இராஜேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

Friday 14 December 2012

சீன ஓபன் சீரீஸ் இறுதிபோட்டி: சாய்னா இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி!

சீனா: சீன ஓபன் சூப்பர் சீரீஸ் இறுதிப்போட்டியின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

புதன்கிழமை நடந்த முதல் போட்டியில் அவர் டென்மார்க்கின், டைன் பான் உடன் ஆடினார். அதில் 14-21, 21-11, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் சாய்னா தோற்றுப்போனார். இந்த ஆட்டத்தின் முதலில் சற்று சறுக்கிய சாய்னா பின்னர் சுதாரித்து விளையாடினாலும் மீண்டும் சறுக்கி தோற்றுப்போனார். இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நீடித்தது.

இந்நிலையில் இரண்டாவது ஆட்டதை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இன்று தாய்லாந்தின் 17 வயது ரட்சனாக் இண்டனானுடன் மோதினார். இவர்கள் இருவரும் இதுவரை 4முறை விளையாடி இருக்கிறார்கள். அதில் சாய்னா 3 முறையும் ரட்சனாக் ஒரு முறையும் வென்றிருக்கிறார். 2011 சுதிர்மான் கோப்பைக்கு பிறகு சாய்னா இதுவரை இவரிடம் தோற்றதே இல்லை. ஆனால் இன்று ஆட்டம் துவங்கியது முதலே மிகச்சிறப்பாக விளையாடினார் ரட்சனாக். வெறும் 34 நிமிடங்களில் இவர் சாய்னாவை 21-13, 21-16 என்ற நேர் புள்ளிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு தன்னை தகுதியாக்கிக்கொண்டார். 

நாளை சாய்னா தனது மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் சென்க் ஐ சந்திக்கிறார். இவர்கள் இருவரும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். அதில் சாய்னா 7 போட்டிகளிலும் ஜூலியன் 3 போட்டிகளிலும் வென்றிருக்கின்றனர். இந்த போட்டியில் சாய்னா வென்று, மற்றொரு போட்டியில் டைன் தோற்றால் மட்டுமே சாய்னா அடுத்த சுற்றுக்குத்தகுதி பெற முடியும் என்ற நிலையில், நாளைய ஆட்டத்தில் சாய்னா வெல்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

- இராசேந்திர உடையார்

ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக













Thursday 13 December 2012

உலகக்கோப்பை கபடி: இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி

பதிண்டா,பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு  இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதியில் இன்று சந்தித்தன,

அதன்படி "ஏ' பிரிவில் முதலிடம்பெற்ற இந்தியா, பஞ்சாபின் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 71-23 என்ற புள்ளிகள் கணக்கில் இரானை வீழ்த்தியது. 

மற்றொரு அரையிறுதியில், பாகிஸ்தான் அணி கனடாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது, சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை சந்திக்கிறது. 


அதேபோல மகளிர் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது.


-இராசேந்திர உடையார்

ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக.

Wednesday 12 December 2012

உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா

பஞ்சாப், இந்தியா: உலகக் கோப்பை கபடிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

மூன்றாவது உலகக் கோப்பை கபடிப் போட்டி பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்துள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அதன்படி "ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பஞ்சாபின் மான்சாவில் நேற்று நடைபெற்ற தனது கடைசி சுற்று ஆட்டத்தில் 73-28 என்ற புள்ளிகள் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. 

இந்தியத் தரப்பில் பரம் சிங் 13 புள்ளிகளையும், மன்மிந்தர் சரண், சுக்பிர் சர்வான் ஆகியோர் தலா 11 புள்ளிகளையும் பெற்றுத்தந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 புள்ளிகளுடன் "ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தது. இதேபோல் ஈரான், கனடா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நேற்று  நடைபெற்ற மற்றொரு சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 64-21 என்ற புள்ளிகள் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியபோதும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

இன்று  (டிச.12) நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா, ஈரானையும், பாகிஸ்தான், கனடாவையும் சந்திக்கின்றன. இதில் வெற்றிபெறும் அணிகள் வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதும். 

அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும். இந்த ஆட்டம் நாளை  நடைபெறுகிறது.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Tuesday 11 December 2012



லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஒன்பதாவது மற்றும் இறுதி  சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.

நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன்  ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆட்டம் இறுதிவரை யாருக்கும் சாதகம் இல்லாமலே இருந்தது. ஆனந்த் இரண்டு முறை சமன் செய்ய விரும்பி ஒரே நகர்துதலை செய்த போதும். கார்ல்சனுக்கு அதில் விருப்பமில்லாமல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடினார். ஆனாலும் அறுபத்தொன்றாவது நகர்துதலில் வெற்றிக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த கார்ல்சன் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள சம்மதித்தார். இந்த சமன் மூலம் ஆனந்த் ஒன்பது ஆட்டங்களில் ஒன்பது புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்தார். கார்ல்சன் பதினெட்டு புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் பரிசையும் தட்டி சென்றார்.இரண்டாவது பரிசு கிராம்னிக் மற்றும் மூன்றாவது பரிசு நகாமுரா விற்கும் கிடைத்தது. 

- ராசேந்ிரடையார்
ஸ்போர்ட்ஸ் நிூஸ் இந்ியாவிற்காக 

Sunday 9 December 2012

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 2ஆவது நிமிடத்திலேயே அந்த அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அந்த அணியின் கிறிஸ்டோபர் அதிவேகமாக அடித்ததால், கோல் வாய்ப்பு வீணானது.இதன்பிறகு 5ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் ஜேமி டுவைர், அதை கோலாக்கினார்.ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது கோல் கிடைத்தது. இந்த கோலையும் ஜேமி டுவைர்தான் அடித்தார். இதன்பிறகு இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலிய தடுப்பாட்டக்காரர்களிடம் அது எடுபடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


பின்னர் நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிரென்ட் மிட்டன், இந்திய தடுப்பாட்டக்காரர்களை தாண்டி சிறப்பாக பந்தைக் கடத்தினார். அது சகவீரரான கைரான் கோவர் கையில் கிடைக்கவே கோலானது.ஆஸ்திரேலிய அணி சில தவறுகளை செய்ததால், மேலும் சில கோல் வாய்ப்புகளை இழந்தது. இந்திய அணிக்கு 45ஆவது நிமிடத்தில் கோல் வாய்ப்பு நழுவியது. இறுதியில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.எஸ்.வி.சுனில் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தசைப்பிடிப்புடனேயே விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்புகூட கிடைக்கவில்லை.



-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக.

Saturday 8 December 2012

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஆறாவது சுற்றில் தோல்வி!

லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ எதிர்த்து வெள்ளைக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். ஆனந்த் ஆட்டத்தின் 41 ஆவது நகர்த்துதலில் செய்த ஒரு பெரிய தவறு அவரை தோல்வி அடைய வைத்தது. அதுவரை எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எண்ணியிருந்த அவரது ரசிகர்களுக்கு அவருடைய ஆட்டம் மிகுந்த வியப்பை அளித்தது,. அதைத்தொடர்ந்து 2 நகர்த்துதல்களில் ஆனந்த் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். லண்டன் போட்டியில் ஆனந்த் அடையும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வியின் மூலம் ஆனந்த் 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார். ஏழாவது சுற்றில் அவர் உலகின் சிறந்த பெண் போட்டியாளர் ஜுதித் போல்கர் உடன் விளையாட இருக்கிறார். 


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Friday 7 December 2012

உலக இளையோர் குத்துச்சண்டை: இந்தியாவிற்கு இரண்டு வெண்கலம்!

ஏராவன், ஆர்மேனியா: ஆர்மேனியாவில் நடைபெற்று வரும் இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சந்தீப் சர்மா, ரஷியாவின் மகமூத் மத்யூவிடம்  9-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி கண்டார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

49 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் லலிதா பிரசாத் 8-13 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் எல்.வி. பின்னிடம் தோல்வி கண்டார். இதனால் இவருக்கும் வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

91 கிலோ எடைப்பிரிவில்  நரேந்தர் பெர்வால் இன்று  அரையிறுதியில், ஜெர்மனியின்  ஃப்ளொரியன் ஸ்சூல்ஸ் ஐ எதிர்த்து களமிறங்குகிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

லண்டன் கிளாசிக் செஸ்: ஆனந்த் ஐந்தாவது சுற்றில் வெற்றி!

விஸ்வநாதன் ஆனந்த், படம் உதவி: Ray Morris-Hill
லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில் இன்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் கெவின் ஜோன்ஸ் ஐ எதிர்த்து கருப்புக்காய்களுடன் விளையாடினார் ஆனந்த். கெவின் ஆட்டத்தின் பதினாலாவது நகர்த்துதலில் செய்த ஒரு சிறு தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆனந்த், மிக விரைவிலேயெ ஒரு குதிரையை வீழ்த்தினார்.21 ஆவது நகர்த்துதலில் வெற்றியை முழுவதுமாக உறுதி செய்து 29 ஆவது நகர்த்துதலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் செஸ் போட்டியில் முதல் வெற்றியைப் பெற்று, ஐந்து சுற்றுகள் முடிவடைந்த நிலையில், 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் இருக்கிறார் ஆனந்த். ஆறாவது சுற்றில் அவர் இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ஸ் ஐ சந்திக்கிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Thursday 6 December 2012

லண்டன் கிளாசிக் செஸ் : நேரலை

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி தகுதி பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 


ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணி சுறுசுறுப்பின்றி விளையாடியது. கடந்த மூன்று ஆட்டங்களில் இருந்த வேகம் இன்று இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் களமுனை, இடது பக்கத்தில் மிகப்பலவீனமாக இருந்தது.தடுப்பாட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை. அதனால் மொத்தமாக 6 பெனல்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியத்திற்க்கு கிடைதது. ஆனால் இந்திய கோல் காப்பாளர், பி.டி.ராவின் மிகச்சாதுர்யமான தடுப்பு, இந்தியாவை 6 முறையும் அணை போல் காத்தது என்றால் அது மிகையில்லை.களப்பணியிலும் இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் முன்கள வீரர் சாண்டி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். ரகுநாத் இரண்டுமுறை எச்சரிக்கை செய்யப்பட்டார்.முதல் பாதியில் வெறும் 29 விழுக்காடு நேரமே, இந்திய வீரர்கள் பந்தை தன் வசம் வைத்திருந்தனர். இரண்டாவது பாதியில் இந்தியா பல முன்களப்பணி வாய்ப்புகளைத்தவறவிட்டது. தொழில்நேர்த்தி மிக்க அணி போல இந்தியா ஆடவில்லை.இந்த வேளையில், இந்தியா 1982 ஆம் ஆண்டிற்க்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பதும், 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மிகச்சிறப்பான நேரம் என்றால் அது திம்மையா அடித்த கோல் நிமிடம் மட்டுமே. அதிர்ஷ்டவசமாக அதற்குப்பின் பெல்ஜியம் எந்த கோலையும் அடிக்கமுடியவில்லை. இன்றைய ஆட்டம் போல ஆடினால் அரையிறுதியில் இந்தியா வெல்லுமா என்பது ஐயமே. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் விளையாட இருக்கிறது.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

Wednesday 5 December 2012

லண்டன் கிளாசிக் செஸ்: நான்கு சுற்றுகளிலும் ஆனந்த் சமன்..!

லண்டன், இங்கிலாந்து: லண்டன் கிளாசிக் செஸ் ஒலிம்பியா கடந்த முதல் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கின்றன.  முதல் சுற்றில் பை மூலம் வெளியில் இருந்த ஆனந்த், இரண்டாவது சுற்றில் இங்கிலாந்தின் லூக் மக்சேனுடன், வெள்ளைக்காய்களுடன் விளையாடினார். இதில் மிக மோசமாக ஆடிய ஆனந்த அதிர்ஷ்டவசமாக 108 நகர்த்துதல்களில் சமன் செய்தார். மூன்றாவது சுற்றில் அவர் அர்மீனியாவின் உலகின் இரண்டாம் நிலை வீரர், லெவான் அரோனியனுடன் விளையாடினார். இதில் ஆனந்த் வெற்றி பெற பல வாய்ப்புகள் இருந்தும் அனைத்தையும் தவறவிட்டார். அரோனியன் பின்னர் சிறப்பாக விளையாடி தோல்வியைத்தவிர்த்து போட்டியை சமன் செய்தார்.

நான்காவது சுற்றில் ஆனந்த், முன்னாள் உலக வாகையர் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் உடன் மோதினார்.இதிலும் 40 நகர்த்துதல்களில் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள இருவரும் சம்மதித்தனர். இதனால் 4 சுற்றுகளின் முடிவில் 3 புள்ளிகளுடன் ஆனந்த் 6 ஆம் இடத்தில் இருக்கிறார்.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா தகுதிச்சுற்றில் முதலிடம்.




Sunday 2 December 2012

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா இரண்டாவது போட்டியில் வெற்றி!

ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் கோல் அடிக்கிறார்
மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி 'ஏ' பிரிவில், இந்தியா தனது இரண்டாவது போட்டியில்நியூசிலாந்து அணியை சந்தித்தது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே, இந்தியாவின் ருபீந்தர் தனது வலைக்குள்ளேயே பந்தை அடித்து நியூசிலாந்துக்கு ஒரு கோல் முன்னனி கொடுத்தார். முதல் பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே பின்னடைவை சந்தித்த போதும், இந்திய இளம்  வீரர்களின் ஆட்டம்,காண்பதற்க்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிகவேகமான மற்றும் தந்திரமான ஆட்டம், இந்திய ஹாக்கியின் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. இதைப்போல விளையாடித்தோற்றாலும் அது நிச்சயம் மகிழ்வூட்டுவதாகவே இருக்கும்.

ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் இந்தியாவின், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். அடுத்த நான்கு நிமிடத்தில் குர்விந்தர் சிங் மற்றொரு அற்புதமான கோல் அடித்து 2-1 என்று முன்னிலை கொடுத்தார். பின்னர் 25 ஆவது நிமிடத்தில் ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை அதிகப்படுத்தினார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் டானிஷ் முஜ்தபா மற்றொரு கோல் அடித்து 4-1 என்று அசைக்க முடியாத முன்னிலை கொடுத்தார். பின்னர் ஆட்டம் முடிவடையும் தருவாயில், 85 ஆவது நிமிடத்தில், நியூசிலாந்தின் வில்சன் ஒரு கோல் அடித்தாலும் அது ஆட்டத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. நாளை இந்தியா, ஜெர்மனியை சந்திக்கிறது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் வெற்றி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கின. இதில் 'ஏ' பிரிவில், இந்தியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. 

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இங்கிலாந்து, ரிச்சர்ட் ஸ்மித் தின் பெனல்டிக் கார்னர் மூலம் ஒரு கோல் போட்டு முன்னனி பெற்றது. ஆனால் அதற்குபிறகு சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்திய இளம் அணி,  22 ஆவது நிமிடத்தில் டேனிஷ் முஜ்தபா மூலமும், 38 ஆவது நிமிடத்தில் யுவராஜ் வால்மீகி மூலமும் பின்னர் 66 ஆவது நிமிடத்தில் குர்விந்தர் சிங் மூலமும் மூன்று கோல்களை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில், கடைசி இடத்தை மட்டுமே பிடித்ததால் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டபின், இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் இந்தியா, நியூலாந்தை சந்திக்கிறது. மற்றொரு 'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி, நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக