Thursday 22 November 2012

பன்னாட்டு சூப்பர் சீரீஸ் ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் தோல்வி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி
பெர்த், ஆஸ்திரேலியா: லான்கோ பன்னாட்டு ஒன்பது பேர் சூப்பர் சீரீஸ் ஹாக்கி போட்டிகள் இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோலாகலமாக துவங்கின. முதல் போட்டியில் புத்துணர்வு பெற்ற இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியாவின் குர்விந்தர் சிங் ஒரு கோல் அடித்து இந்தியாவிற்க்கு முன்னணி தந்தார், ஆனால் இங்கிலாந்தின் டேனியல் ஃபாக்ஸ் மற்றும் டேவிட் கண்டன் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வெற்றி பெறச்செய்தனர். இந்தியா ஆஸ்திரேலியாவை நாளையும், பாகிஸ்தானை சனிக்கிழமையும் சந்திக்க இருக்கிறது.



-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். அரையிறுதிக்கு ஹரிகா தகுதி!

த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. காலிறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் ஒவ்வொருவரும் தன் எதிராளியுடன் இரண்டு ஆட்டங்கள் ஆட வேண்டும். ஒன்று வெள்ளைக்காய்களுடன் மற்றொன்று கறுப்புக்காய்களுடன். இதில் நேற்று கருப்பு காய்கள்டன் ஆடிய ஹரிகா பல தவறுகள் செய்தபோதும், சீனாவின் சூ சாஓ ஆட்டத்தை சமன் செய்கிற அளவில் மோசமாக ஆடி அரை புள்ளியுடன் திருப்தி அடைந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாற்று ஆட்டத்தில் ஹரிகா வெள்ளைக்காய்களுடன் ஆடினார். ஆனால் இன்று பெரிதாக எந்த தவறையும் செய்யாமல் ஆடியதால் இரண்டாவது ஆட்டமும் சமநிலையில் முடிந்தது, எனவே, இரண்டு ஆட்டங்களின் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளியை பெற்று சம நிலையில் இருந்தனர். அதனால் இன்று டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டி இருந்தது. முதல் ஆட்டத்தில் வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஹரிகா எளிதில் ஆட்டத்தை சமன் செய்தார்.இதனால் இரண்டாவது ஆட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.கறுப்பு காய்களுடன் ஆடினாலும் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஹரிகா 33 ஆவது நகர்த்தலில் வென்றார். இதன் மூலம் ஹரிகா உலக மகளிர் செஸ் வாகையர் பட்டத்துக்கான அரை இறுதியில், பல்கேரியாவின் அன்டொனேடா ஸ்டெஃபனாவாவை எதிர்த்து விளையாட தகுதி பெற்று இருக்கிறார். மற்றொரு அரை இறுதியில் உக்ரைனின் அன்னா உஷெனினா சீனாவின் ஜு வெஞ்ஜுனை எதிர்த்து களமிறங்குகிறார். இனிவரும் ஆட்டங்களிலாவது சிறப்பாக ஆடுவாரா ஹரிகா? பொருத்திருந்து பார்க்கலாம்.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

உலக மகளிர் செஸ் வாகையர். காலிறுதியில் ஹரிகா சமன்!



த்ரோனவல்லி ஹரிகா Vs சாவோ சூ ஆட்டம்!
கன்ட்டி-மன்ஸிய்ஸ்க், ரஷ்யா: உலக மகளிர் வாகையர் பட்டத்திற்க்கான செஸ் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தின் மாற்றுப்போட்டியில், இந்தியாவின் த்ரோனவல்லி ஹரிகா, சீனாவின் சாவோ சூ உடன் வெள்ளைக்காய்களுடன் விளையாடினார். சிறப்பான துவக்கத்தைப்பெற்ற ஹரிகா 17 வது நகர்த்துதலில் செய்த தவறால் வெற்றியை கோட்டை விட்டார். மேலும் பல தவறுகளைத்தொடர்ந்து செய்து கொண்டிருந்த ஹரிகா இரண்டு சிப்பாய்களை இழந்து பரிதாமாக இருந்த நிலையில், சீனாவின் சாவோ சூ செய்த சிறுபிள்ளைத்தனமான தவறு ஆட்டத்தை சமனில் முடிக்கும் வாய்ப்பை ஹரிகாவிற்க்கு கொடுத்தது. இதானால் இந்த ஆட்டம் 70 நகர்த்துதல்களில்  எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது. நாளை டை பிரேக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன.


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

ஹாங்காங் ஓபன் : முதல் சுற்றில் சாய்னா வெற்றி!

கவ்லூன், ஹாங்காங்: உலக சூப்பர்சீரீஸ் ஹாங்காங் ஓபன் இறகுப்பந்து போட்டி இன்று கவ்லூன் நகரில் துவங்கியது. முதல் சுற்றுப்போட்டிகளில் இந்தியாவிற்க்கு இன்று வெற்றிகள் குறைவாகவும் தோல்விகள் அதிகமாகவும் கிடைத்தன.

காலையில் முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை சீனாவின் சூ சென் மற்றும் மா ஜின் இணையிடம் 15-21, 16-21 என்ற நேர் புள்ளிகளில் , முப்பது நிமிடத்தில் தோற்றது.அடுத்து நடைபெற்ற மற்றுமொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிக்கி ரெட்டி இணை அமெரிக்காவின் ஃபிலிப் சூவ் மற்றும் ஜெமி சுமந்தி இணையை 21-19,21-15 என்ற நேர் புள்ளிகளில், 24 நிமிடங்களில் வென்றது.

பின்னர் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் இந்தோனேசியாவின் அப்ரில்லா யுசுந்தரியை 22-20, 21-8 என்ற நேர் புள்ளிகளில் 33 நிமிடங்களில் வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் இவர் சீனாவின் வாங் லின் உடன் நாளை மோத இருக்கிறார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் தருண் கோனா மற்றும் அருண் விஷ்ணு இணை இங்கிலாந்தின் க்ரிஸ் அட்காக் மற்றும் அண்ட்ரூ எல்லீஸ் இணையிடம் 18-21, 14-21 என்ற நேர் புள்ளிகளில் தோற்றது. இந்த ஆட்டம் சுமார் 31 நிமிடங்கள் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜயராம், சீனாவின் வாங் ஷெங்மின்னை  22-20,23-21 என்ற புள்ளிக்கணக்கில் கடுமையாகப் போராடி வென்றார். 35 நிமிடங்கள் இந்தப்போட்டி நடைபெற்றது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப் பாருபள்ளி, உலகின் ஏழாம் நிலை வீரர், டென்மார்க்கின் ஜேன் ஓ ஜோர்கென்சனை 24-22, 20-22, 22-20 என்ற புள்ளி கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் வென்றார். இரண்டாவது ஆட்டதில் காஷ்யப் 19-15 என்ற முன்னிலை பெற்றிருந்தபோதும் 20-22 என்ற புள்ளிக்கணக்கில் அந்த ஆட்டத்தை இழந்ததால் மூன்றாவது ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. இந்த ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஃப்ரான் குர்னியவன் மற்றும் செண்டி புஷ்பா இராவதி இணை இந்தியாவின் அக்ஷய் திவால்கர் மற்றும் ப்ரத்னியா கத்ரே இணையை 21-18, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ரிக்கி விடியண்ட்டோ மற்றும் புஷ்பிதா ரிசி திலி இணை இந்தியாவின் அருண் விஷ்ணு மற்றும் அபர்ணா பாலன் இணையை 21-13, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின்  நாளைய நட்சத்திரம், பி.வி.சிந்து இந்தோனேசியாவின் பெலேட்ரிக்ஸ் மனுபுடி யிடம் 12-21,21-18,15-21 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தோனேசியாவின் ஆல்வண்ட் யுலியண்டோ சந்த்ரா மற்றும் மார்கிஸ் கிடோ இணை இந்தியாவின் மனு அத்ரி மற்றும் சுமீத் ரெட்டி இணையை 11-21,21-11,21-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ப்ரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் அக்சய் திவால்கர் இணை இந்தோனேசியாவின் ஹஃபிஸ் ஃபைசல் மற்றும் புத்ரா இகா ரோமா இணையை 21-16, 21-23, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்குத்தகுதி பெற்றது.

பெண்கள் இரட்டையர் போட்டியில் சீனாவின் வாங் சியோலி மற்றும் யூ யங் இணை இந்தியாவின் அபர்ணா பாலன் மற்றும் சிக்கி ரெட்டியை வெறும் பதினைந்தே நிமிடங்களில் 21-3, 21-7 என்று எளிதில் வீழ்த்தியது.மற்றொரு போட்டியில் இந்தியாவின் ப்ரத்னவா கத்ரே மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை ஃப்ரான்ஸ் நாட்டின் ஆட்ரே ஃபோண்டைன் மற்றும் எமிலி லீஃபல் இணையை 21-10, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக