Friday 9 November 2012

ஆசிய இளையர் பளுதூக்கும் போட்டி:சந்திரிகா தரஃப்தர், அருணா சந்தா மற்றும் ராகுல் பதக்க வேட்டை.!!

சந்திரிகா தரஃப்தர்
சந்திரிகா தரஃப்தர்
யாங்கூன்: மியான்மரில் நடைபெற்றுவரும் ஆசிய இளைஞர் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் ஆர்.வி.ராகுல் இன்று மேலும் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றதன் மூலம், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

ஆண்கள் இளையர் 77 கிலோ எடைப்பிரிவில் ராகுல், ஸ்நாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் மற்றும் மொத்தப்பளுவாக 280 கிலோ தூக்கி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். 

முன்னதாக ஆண்கள் இளையர் 56 கிலோ எடைப்பிரிவில் அருணா சாந்தா இரண்டு தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும், பெண்கள் இளையர் 44 கிலோ எடைப்பிரிவில் சந்திரிகா தரஃப்தர்  132 கிலோ மொத்தப்பளு தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர். இதன் மூலம் இந்தியா பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது.

-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

பீட்டர்சன் நூறு..இங்கிலாந்து 408/3..பலிக்குமா இந்தியாவின் தந்திரம்.?


அஹமதாபாத்: அரியானா அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 408 ஓட்டங்களைப்பெற்றது. இதில் பீட்டர்சன் 110, குக் 94, நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல் ஆகியோர் அரைநூறை பெற்றனர்.

அரியானாவின் மிக மிக மோசமான பந்துவீச்சில் பயிற்சி பெறும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் உலகத்தரம் மிக்க இந்திய சுழல்பந்துவீச்சை எதிர் கொள்ளப்போகிறது என்பது சிந்தனைக்குரியது! இன்றைய அரியானா அணியின் பந்துவீச்சைப்பார்த்தபோது, எங்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள், இதை விட சிறப்பாக பந்துவீசக்கூடியவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாகவே பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்படுவதன் நோக்கம், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி, உள்நாட்டின் காலநிலை, ஆட்டக்களம், பந்தின் வேகம் மற்றும் சுழலும் தன்மை மற்றும் இன்னும் சில நிலைமைகளை புரிந்துகொள்வதற்காகவே! ஆனால் கடந்த இரண்டு போட்டிகளையும் பார்க்கும் போது இங்கிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வாய்ப்புகளை வழங்கிவிடக்கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருப்பதாகத்தோன்றுகிறது. முதல் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து அணியின் கண்ணில் கூட காட்டவில்லை. இரண்டாவது  மற்றும் மூன்றாவது போட்டியிலும், அஸ்வின், ஹர்பஜன்,பியுஸ் சாவ்லா, ப்ரக்யான் ஓஜா ஆகியோரை களமிறக்காமலே இங்கிலாந்திற்க்கு பயிற்சியளிக்கிறது இந்தியா. இதில் இங்கிலாந்து அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை படிக்க இயலாமல் போவது ஒருபக்கம் இருந்தாலும், அதேவேளையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்தின் மட்டைத்திறன் பற்றி அறியமுடியாமல் போவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், கெவின் பீட்டர்சனின் அதிரடி நூறும், அணித்தலைவர் அலிஸ்டர் குக்கின் 94 உம், நிக் காம்ப்டன் மற்றும் அயன் பெல்லின் ஐம்பதுகளும் இங்கிலாந்து அணிக்கு எந்த வகையில் கைகொடுக்கும் என்பது முதல் ஐந்து நாள் போட்டி துவங்கியவுடன் தான் தெரியும். இந்தியாவின் தந்திரம் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்..


-இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக.


ஏடிபி: பயஸ் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம்.

ரோடக் ஸ்டெபனக், லியாண்டர் பயஸ்
ரோடக் ஸ்டீபனெக் -லியாண்டர் பயஸ்
லண்டன்: ஏடிபி உலக சுற்றுப்போட்டியின் இரட்டையர் ஆட்டத்தில் இந்திய, செக் குடியரசு வீரர்களான பயஸ்-ராடெக் ஸ்டீபனெக் இணை அரையிறுதிக்கு  முன்னேறியது.

இப்போட்டியின் "ஏ' பிரிவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பயஸ்-ஸ்டீபென்க் இணை, ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ், மார்க் லோபஸ் இணையை 7-5, 6-4 என்ற நேர் புள்ளிகளில் வீழ்த்தியது. இந்தப்போட்டி 1 மணி 32 நிமிடங்கள் நீடித்தது.

இந்திய - செக் குடியரசு இணை, இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், சோணி ஓபன் மற்றும் ஷர்ங்காய் ஓபன் ஆகிய போட்டிகளில் வாகை சூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக