Thursday 25 October 2012

இந்தியா - ஏ அணி தேர்வு..!

Yuvaraj singh and Suresh raina
Yuvaraj Singh and Suresh Raina
 மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று நாள் போட்டியில் விளையாடுவதற்க்கான "இந்தியா-ஏ" அணி இன்று தேர்வு செய்யப்பட்டது.
இந்தியா ஏ அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டம், மும்பை ப்ரபார்ன் மைதானத்தில், அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி துவங்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அணியில், இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா; ஆகிய நான்கு மிதவேகப்பந்து வீச்சாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட தெரிவு செய்யப்படாதது வியப்பளிக்கிறது.

இந்த அணிக்கு பயிற்சியாளராக திரு. லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  ஷிகார் தவானின் திருமணம் நடைபெற இருப்பதால் ,அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு சேர்க்கப்பட்டிருக்கிறார்.

மேலும் தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் யுவராஜ் சிங், முரளி விஜய், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அணி விபரம் (இந்தியா - ஏ):  சுரேஷ் ரெய்னா ( தலைவர்) , முரளி விஜய், அம்பாதி ராயுடு, யுவராஜ் சிங், அஜிங்கா ரஹானே, மனோஜ் திவாரி, வ்ரித்மான் சாஹா ( விக்கெட் காப்பாளர்), இர்ஃபான் பதான், வினய் குமார், அசோக் திண்டா, பர்வீந்தர் அவானா, ராபின் பிஸ்ட், அசோக் மெனாரியா, அபினவ் முகுந்த். பயிற்சியாளர்: லால்சந்த் ராஜ்புத்.

- இராசேந்திர உடையார்..
- ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக..

துலீப் கோப்பை: மைய மண்டலம் 74/2!

தன்மய் ஸ்ரீவத்ஸவ்
சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் துலீப்  கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டியில்,  நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், மைய மண்டலம் இரண்டு விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களை எடுத்துள்ளது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் தன்மய் ஸ்ரீவத்ஸவ் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

முன்னதாக மழை விளையாடியது போக எஞ்சி இருந்த நேரத்தில் கிழக்கு மண்டலம் விளையாடி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 101.5 ஓவர்களில் 232 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டி நிறைவடைய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்ற நிலையில், வெற்றியாளரை முடிவு செய்யப்போவது, ஒவ்வொரு அணியும் தாங்கள் முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்களே. 

அந்த வகையில் மைய மண்டலம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட இன்னும் 159 ஓட்டங்களை எடுத்தாக வேண்டும். நாளைய ஆட்டம் சூடு பிடிக்குமா இல்லை மழையே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

சுருக்கமான எண்ணிக்கை:

கிழக்கு மண்டலம் : முதல் இன்னிங்ஸ், 101.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்கள்

மைய மண்டலம் : முதல் இன்னிங்ஸ்: 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள்.

- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..

ஃப்ரென்ச் ஓப்பன் இரண்டாவது சுற்றில் சாய்னா !


பாரிஸ்: இந்திய இறகுப்பந்து வீராங்கனை சாய்னா நெஹ்வால்,  ஃபிரன்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

முதல் சுற்றுப்போட்டியில் சாய்னா, சீனாவின் லி ஹன் உடன் மோதினார். தர வரிசையில் முன்னிலையில் இருக்கும் சாய்னா 21-11, 16-21, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் லி ஹன்னை வென்றார். இந்த போட்டி சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

சாய்னா தனது இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் சாப்சிரி டெரட்டனாசாய் உடன் மோத இருக்கிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த டென்மார்க் ஓப்பன் போட்டியில் வாகை சூடியவர் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

- இராசேந்திர உடையார்
 ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்க்காக..