Sunday 2 December 2012

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா இரண்டாவது போட்டியில் வெற்றி!

ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் கோல் அடிக்கிறார்
மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டி 'ஏ' பிரிவில், இந்தியா தனது இரண்டாவது போட்டியில்நியூசிலாந்து அணியை சந்தித்தது.

ஆட்டத்தின் துவக்கத்திலேயே, இந்தியாவின் ருபீந்தர் தனது வலைக்குள்ளேயே பந்தை அடித்து நியூசிலாந்துக்கு ஒரு கோல் முன்னனி கொடுத்தார். முதல் பத்து நிமிடத்திற்க்குள்ளாகவே பின்னடைவை சந்தித்த போதும், இந்திய இளம்  வீரர்களின் ஆட்டம்,காண்பதற்க்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மிகவேகமான மற்றும் தந்திரமான ஆட்டம், இந்திய ஹாக்கியின் இழந்த பொற்காலத்தை நினைவூட்டுவதாக இருந்தது. இதைப்போல விளையாடித்தோற்றாலும் அது நிச்சயம் மகிழ்வூட்டுவதாகவே இருக்கும்.

ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் இந்தியாவின், ஆகாஷ்தீப் சிங் ஒரு கோல் அடித்து 1-1 என்று சமன் செய்தார். அடுத்த நான்கு நிமிடத்தில் குர்விந்தர் சிங் மற்றொரு அற்புதமான கோல் அடித்து 2-1 என்று முன்னிலை கொடுத்தார். பின்னர் 25 ஆவது நிமிடத்தில் ரகுநாத் பெனல்டி கார்னர் மூலம் மற்றொரு கோல் அடித்து 3-1 என்று முன்னிலையை அதிகப்படுத்தினார். பின்னர் 65 ஆவது நிமிடத்தில் டானிஷ் முஜ்தபா மற்றொரு கோல் அடித்து 4-1 என்று அசைக்க முடியாத முன்னிலை கொடுத்தார். பின்னர் ஆட்டம் முடிவடையும் தருவாயில், 85 ஆவது நிமிடத்தில், நியூசிலாந்தின் வில்சன் ஒரு கோல் அடித்தாலும் அது ஆட்டத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. நாளை இந்தியா, ஜெர்மனியை சந்திக்கிறது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் போட்டியில் வெற்றி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இன்று துவங்கின. இதில் 'ஏ' பிரிவில், இந்தியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை சந்தித்தது. 

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இங்கிலாந்து, ரிச்சர்ட் ஸ்மித் தின் பெனல்டிக் கார்னர் மூலம் ஒரு கோல் போட்டு முன்னனி பெற்றது. ஆனால் அதற்குபிறகு சுதாரித்துக்கொண்டு ஆடிய இந்திய இளம் அணி,  22 ஆவது நிமிடத்தில் டேனிஷ் முஜ்தபா மூலமும், 38 ஆவது நிமிடத்தில் யுவராஜ் வால்மீகி மூலமும் பின்னர் 66 ஆவது நிமிடத்தில் குர்விந்தர் சிங் மூலமும் மூன்று கோல்களை அடித்து 3-1 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2012 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில், கடைசி இடத்தை மட்டுமே பிடித்ததால் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர்கள் நீக்கப்பட்டு, இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டபின், இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டியில் இந்தியா, நியூலாந்தை சந்திக்கிறது. மற்றொரு 'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி, நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக