Wednesday 27 February 2013

துபை ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சோம்தேவ்

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சோம்தேவ் முன்னேறியுள்ளார். துபையில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சோம்தேவ் தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் இகர் குனிட்ஸினை தோற்கடித்தார்.

புதன்கிழமை நடைபெறவுள்ள 2-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டினை சந்திக்கிறார் சோம்தேவ். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டினை சந்திப்பதால் சோம்தேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் டிரா செய்தார் ஆனந்த்

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 3-வது சுற்றில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இப் போட்டி நடைபெற்று வருகிறது. 4 வீரர்கள் பங்கேற்றுள்ள இப் போட்டி டபுள் ரவுண்டு ராபின் முறையில் நடைபெற்று வருகிறது. 

இதில் முதல் இரு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில் 3-வது சுற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அதில் ஓர் ஆட்டத்தில் ஆனந்தும், கெல்பான்டும் மோதினர். முதல் வெற்றியை பெறுவதற்காக கெல்பான்ட் கடுமையாகப் போராடினார். எனினும் ஆனந்த் சிறப்பாக காய்களை நகர்த்தியதால் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடும் போராட்டத்துக்குப் பிறகு கெல்பான்டை வீழ்த்தி ஆனந்த் 5-வது முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் இத்தாலியின் ஃபேபியானோ கருணா-முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோருக்கு இடையிலான மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்தது. 

தற்போது 3 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் 4 வீரர்களும் தலா 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு 2-வது ரவுண்டு ராபின் சுற்று தொடங்கவுள்ளது.




- இராசேந்திர உடையார்
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக