Thursday 6 December 2012

லண்டன் கிளாசிக் செஸ் : நேரலை

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி!

மெல்பர்ன், ஆஸ்திரேலியா: சாம்பியன் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய ஆடவர் ஹாக்கி தகுதி பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 


ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணி சுறுசுறுப்பின்றி விளையாடியது. கடந்த மூன்று ஆட்டங்களில் இருந்த வேகம் இன்று இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் களமுனை, இடது பக்கத்தில் மிகப்பலவீனமாக இருந்தது.தடுப்பாட்டத்திலும் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை. அதனால் மொத்தமாக 6 பெனல்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியத்திற்க்கு கிடைதது. ஆனால் இந்திய கோல் காப்பாளர், பி.டி.ராவின் மிகச்சாதுர்யமான தடுப்பு, இந்தியாவை 6 முறையும் அணை போல் காத்தது என்றால் அது மிகையில்லை.களப்பணியிலும் இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் முன்கள வீரர் சாண்டி ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் இருந்தபோது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறினார். ரகுநாத் இரண்டுமுறை எச்சரிக்கை செய்யப்பட்டார்.முதல் பாதியில் வெறும் 29 விழுக்காடு நேரமே, இந்திய வீரர்கள் பந்தை தன் வசம் வைத்திருந்தனர். இரண்டாவது பாதியில் இந்தியா பல முன்களப்பணி வாய்ப்புகளைத்தவறவிட்டது. தொழில்நேர்த்தி மிக்க அணி போல இந்தியா ஆடவில்லை.இந்த வேளையில், இந்தியா 1982 ஆம் ஆண்டிற்க்கு பிறகு இப்போதுதான் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பதும், 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் மிகச்சிறப்பான நேரம் என்றால் அது திம்மையா அடித்த கோல் நிமிடம் மட்டுமே. அதிர்ஷ்டவசமாக அதற்குப்பின் பெல்ஜியம் எந்த கோலையும் அடிக்கமுடியவில்லை. இன்றைய ஆட்டம் போல ஆடினால் அரையிறுதியில் இந்தியா வெல்லுமா என்பது ஐயமே. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா அரையிறுதியில் விளையாட இருக்கிறது.


-இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக