Friday 15 March 2013

உலக மகளிர் இறகுப்பந்து - சாய்னா நேவால் இரண்டாமிடம்

சாய்னா நேவால் 

உலக மகளிர் இறகுப்பந்து திறனாளர் வரிசையில், இந்தியாவின் சாய்னா நேவால் மீண்டும் இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து  இங்கிலாந்து இறகுப்பந்து  போட்டியின் அரையிறுதியில் தோற்ற நிலையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சாய்னா, தற்போது மீண்டும் இரண்டாவது  இடத்துக்கு முன்னேறியுள்ளார். 


இந்தியாவின் காஷ்யப் 2 இடங்கள் முன்னேறி தற்போது 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவின் அஜய் ஜெயராம் தொடர்ந்து 31-வது இடத்திலும், குருசாய் தத், செüரப் வர்மா ஆகியோர் முறையே 2 மற்றும் 4 இடங்கள் முன்னேறி 36 மற்றும் 39-வது இடத்திலும் உள்ளனர்.இந்தியாவின் ஆனந்த் பவார் 44-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 16-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக

அஸ்லன் ஷா ஹாக்கி: இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா



அஸ்லன் ஷா ஹாக்கிப் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது. இதன்மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா. 

மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில், நடப்புச் சாம்பியன் நியூஸிலாந்தை எதிர்கொண்டது இந்தியா.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 40 மற்றும் 55-வது நிமிடங்களில் கோலடித்த நியூஸிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. 

இதன்மூலம் 2-வது வெற்றியை ருசித்த நியூஸிலாந்து, இறுதிச்சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. 

மற்ற இரு ஆட்டங்களும் டிரா: ஆஸ்திரேலியா-கொரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதேபோல் பாகிஸ்தான்-மலேசியா இடையிலான ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தற்போது 6 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே முதல் 2 இடங்களிலும், நியூஸிலாந்து 6 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், கொரியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே 4 மற்றும் 5-வது இடத்திலும், இந்தியா 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி? தற்போதைய நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கு ஆஸ்திரேலியா, மலேசியா, நடப்புச் சாம்பியன் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. 

வரும் சனிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். 

சனிக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தையும், மலேசியா, இந்தியாவையும் சந்திக்கின்றன. 

இதில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் டிரா செய்தாலே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். அப்படி நடக்கும்பட்சத்தில், மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றாலும் மலேசியா எளிதாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும். 

ஒருவேளை நியூஸிலாந்திடம் ஆஸ்திரேலியா தோற்குமானால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா டிரா அல்லது வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.



- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ்  நியூஸ் இந்தியாவிற்காக