Friday 24 January 2014

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் நடால், ஃபெடரர் மோதல்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் ரோஜர் ஃபெடரரும்  ரஃபேல் நடாலும் மோத இருக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பரம வைரிகள் மீண்டும் களம் காணுகின்றனர். இவர்களுக்கிடையில் இதுவரை நடந்த 32 போட்டிகளில் நடால் 22 போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இந்த அரையிறுதி ஆட்டமும் மற்றுமோர் சிறந்த ஆட்டமாக இருக்கப்போகிறது என்பதில் ஐயமில்லை. எனினும், 2007 - 2010 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இருவரும் ஆடிய வேகமும், ஆட்டத்திறனும் இப்போது இருக்கிறதா? என்பது கேள்விக்குறிதான்

இதற்கு காரணம் நடாலின் இடது உள்ளங்கையில் ஏற்பட்டுள்ள காயமும், ஃபெடரரின் அண்மைய ஆட்டங்களும். ஃபெடரர் மீண்டும் தனது முன் கை ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியதை கடந்த ஆட்டங்களில் பார்க்க முடிந்தது.

அதே வேளையில், தன்கையில் காயம் இருப்பது தனது கவனத்தை சிதைக்கிறது என்றும், காயம் தொடர்ந்து இருக்குமாயின் இறுதி ஆட்டம் ஒரு கனவாகிவிடும் என்று நடால் கூறி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருவரை ஒருவர் வீழ்த்த என்ன வியூகம் வகுக்கப்போகின்றனர், இருவரின் ஆட்டமுறையும் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது, யாருக்கு எது பலம், எது பலவீனம் என்ற கேள்விகளுக்கிடையில் இருவரின் வயதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருப்பதையும் தவிர்க்க முடியாததாகிறது.

இவர்கள் இருவரும் கடந்தகாலங்களின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்றாலும்.. பல முன்னனி வீராங்கனைகளை மண்ணைக்கவ்வ வைத்த கனடாவின் 19 வயது யூஜெனி புட்சர்டும், முன்னனி வீரர்களை வீழ்த்தி, முதல் முறையாக க்ராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் இறுதிப்போட்டியில் களம் காணும் வாவ்ரின்காவும், பல புதிய கேள்விகளை நம்முள் எழுப்புகிறார்கள்.

எது எப்படியோ! மற்றுமொரு கண்ணுக்கு விருந்தளிக்கும் அற்புதமான அரையிறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

- இராசேந்திர உடையார் 
ஸ்போர்ட்ஸ் நியூஸ் இந்தியாவிற்காக

No comments:

Post a Comment